நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையதளங்களில் கசிந்துள்ளமை குறித்து படத்தின் இயக்குநர் எச். வினோத் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இக்காட்சிகளைப் பரப்புவோருக்கு எதிராக அவர் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
“திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒருவருடைய கனவு அடங்கியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இவ்வாறான கசிவுகள் ஏற்படுவது மனதிற்கு மிகவும் வேதனையளிக்கின்றது.
எனவே, தயவுசெய்து கசிந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிராமல் படக்குழுவினருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளைச் சட்டவிரோதமாகப் பதிவேற்றுவோர் மற்றும் அதனை மீள் பதிவு செய்வோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனமான KVN Productions எச்சரித்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் லிங்குகளை உடனடியாக நீக்குவதற்குரிய நடவடிக்கைகளைத் தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திரைத்துறைக்கு நடிகர் விஜய் வழங்கும் இறுதிப் படம் எனக் கருதப்படுவதால், இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கும் வகையில் காட்சிகள் கசிந்துள்ளமை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
