2026 தமிழக சட்டமன்ற தேர்தல் மிகப்பெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் திமுக அல்லது அதிமுகவே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியமைத்து வந்த நிலையில், கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின்னர் இரு கட்சிகளுக்கும் மாற்றாக தவெக வெற்றியடைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றிருக்கிறார். பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவே இரண்டாவது முறை வெற்றி பெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், இத்தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது
இந்நிலையில், இன்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மே 7 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார். ஏற்கனவே, திமுகவில் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இல்லாத சூழலில், விஜய் எதிர் உதயநிதி யுகம் தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
