நீட் மறுதேர்வு ஜூன் 21 ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் திகதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக இரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அண்மையில் அறிவித்திருந்தது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீட் மறுதேர்வு வருகின்ற ஜூன் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பின்தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீட் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என்றும், முந்தைய தரவுகளின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் என்டிஏ தெரிவித்திருந்தது.
மேலும், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், ஏற்கனவே செலுத்திய கட்டணமும் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
