இரத்மலானை விமான நிலைய வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து, அதன் ஓட்டுநரிடமிருந்த 380,000 ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கல்கிசை தலைமையக காவல் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து, பொய் முறைப்பாடு வழங்கிய குற்றச்சாட்டில் முறைப்பாட்டாளர் உட்பட மேலும் இருவர் என மொத்தம் நால்வர் கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் கல்கிஸ்ச தலைமையக காவல்துறையின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றி வந்தவர்களாவர்.
கடந்த 15ஆம் திகதி இரத்மலானை வானுர்தி நிலைய வீதியில் வைத்து இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மொரட்டுவ, அங்குலானை சயுரபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணை அதிகாரிகள், சந்தேகநபர்களான இரு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கைது செய்தனர்.
எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் ‘சீட்டுப் பணம்’ என முறைப்பாட்டாளர் கூறிய வாக்கு மூலத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தபோது, அந்த நபர் பொய் வாக்குமூலம் அளித்துள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினரைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் கீழ், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முறைப்பாட்டாளரான நபரும், அவருடன் இருந்த மற்றொரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்களும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
