இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தேயிலைத் துறையும், அதன் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு நேற்று 21 இலங்கைத் தேயிலைச் சபையின் தலைமை அலுவலகத்திலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்ற “சிலோன் தேயிலை நடை பவனி 2026” இன் தொடர்ச்சியாக, காலி முகத்திடலில் நடைபெற்ற விசேட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
“தேயிலை கைத்தொழிலை காப்போம், சமூகத்தை பலப்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சிறுதோட்ட தேயிலை நிறுவனங்கள், ஊழியர்கள், தேயிலை தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதியமைச்சர், தான் சாதாரண தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில், லயன் அறையொன்றில் பிறந்து வளர்ந்தவன் எனவும்
தனது பெற்றோர் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்து உழைத்ததை நேரில் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், அதே தொழிலாளர் சமூகத்தின் பின்னணியிலிருந்து வந்து இன்று பெருந்தோட்டத்துறைக்கு சேவை செய்யும் பிரதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை பெருமையாகக் கருதுவதாகக் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முன்னர் ரூ. 1,350 ஆக இருந்த நாளாந்தச் சம்பளம் தற்போது ரூ. 1,750 ஆக உயர்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்பப் படியே எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தேயிலை ஏற்றுமதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு காலத்தில் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 76% பங்களிப்பை பெருந்தோட்டங்கள் வழங்கிய நிலையில், தற்போது அவற்றின் பங்களிப்பு 20% ஆக் குறைந்துள்ளது. எஞ்சிய 70%ற்கும் அதிகமான ஏற்றுமதியை சிறு தோட்டத் தேயிலை உரிமையாளர்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கம்பனிகளின் வீழ்சிக்கான காரணங்களை ஆராய்ந்து, பாரம்பரிய முறைகளிலிருந்து விடுபட்டு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்றபோது அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதை அவதானித்ததாகக் கூறிய பிரதி அமைச்சர், இலங்கையிலும் அத்தகைய நவீனமயமாக்கல் அவசியமானது என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, தேயிலைத் துறையிலிருந்து பெறப்படும் லாபத்தின் ஒரு பகுதி அதற்காக உழைக்கும் தொழிலாளர் சமூகத்திற்கும் சென்றடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தொழிலாளர்கள், சிறு தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், ஏற்றுமதியாளர்கள், தரகர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் திரண்டு செயற்பட்டால், குறுகிய காலத்திற்குள் தேயிலைத் துறை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
