வெளிநாடு சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் நாட்டினுள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தி வந்த பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (22) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டுபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுவுடன் தொடர்புடைய 21 சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (22) விசேட பொலிஸ் குழுவொன்றின் கண்காணிப்பின் கீழ் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்தை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அழைத்துவரப்பட்ட நபர்கள் மனித படுகொலைகள், கப்பம் கோருதல், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாவதோடு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களுமாவர். பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 21 பேரும் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில், தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சட்டநடவடிக்கைகளைத் தவிர்ப்பதுக்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பாதாள உலகக் குழுக்களின் வலையமைப்பை ஒழிப்பதுக்கு பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என குறிப்பிட்டார்.
