ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட வயோதிபத் தபதியின் கொலை வழக்கின், சந்தேகநபர் விளக்கமறியல் காவலில் இருந்தபோது இன்று (27) அதிகாலை சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்தபோது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை ஜூன் (03) ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, நேற்று (26) செவ்வாய்கிழமை சிறை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், இன்று (27) அதிகாலை தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தப்பி சென்ற சந்தேக நபரை காவல்துறையினர் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கொலை குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நிலையில் மீண்டும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
