இந்தியாவின் தமிழ்நாட்டின் பூந்தமல்லி வடுகை சுகாதார மாவட்டத்தில் கடந்த ஆண்டில் பதிவான கர்ப்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை கடுமையான மருத்துவ அபாயங்களைக் கொண்டிருந்ததாகத் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவ இயக்ககம் (DPH) நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
‘தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில்’ (Tamil Nadu Journal of Public Health and Medical Research) வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, பூந்தமல்லி சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் 38.1% கர்ப்பங்கள் ‘அதிக ஆபத்தானவை’ (High-Risk Pregnancies) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கர்ப்பகால மரணங்களை ஏற்படுத்தும் காரணிகள் முந்தைய காலத்தைப் போல அதிக இரத்தப்போக்கு அல்லது தொற்று (Sepsis) என்பதில் இருந்து மாறி, தற்போது தைராய்டு குறைபாடுகள் மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிசேரியன் (C-Section) பிரசவங்களாக மாறியுள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலப்பகுதியில், திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ‘பிக்மி’ (PICME) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 9,426 கர்ப்பிணிகளின் விபரங்களை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.
இதில் 3,593 பெண்கள் (38.1%) அதிக ஆபத்துள்ள பிரிவில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, நகர்ப்புற ஆவடி மாநகராட்சிப் பகுதியில் இந்த அபாய விகிதம் 53% ஆக உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளில் 26.1% பேருக்கு ஹைப்போதைராய்டிசமும் (Hypothyroidism), 18.4% பேருக்கு முந்தைய பிரசவத்தில் சிசேரியன் செய்யப்பட்டதும், 10.2% பேருக்கு கர்ப்பகால நீரிழிவு நோயும் (Gestational Diabetes), 6.7% பேருக்கு கர்ப்பகால உயர் இரத்த அழுத்தமும் (Hypertension) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், 32.2% ஆபத்தான கர்ப்பிணிகளுக்கு இந்த நோய்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புகள் ஒரே நேரத்தில் இருந்துள்ளன. இது இந்திய நகர்ப்புறங்களில் பரவி வரும் நாள்பட்ட தொற்றா நோய்கள் கர்ப்பகால ஆரோக்கியத்தை எவ்வளவு தீவிரமாகப் பாதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
ஆய்வின்படி, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்குச் சிசேரியன் பிரசவம் செய்யப்படும் விகிதம் 64.5% ஐ எட்டியுள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி சிசேரியன் விகிதமான 36.3% ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும். இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக 99.7% பிரசவங்கள் வெற்றிகரமாக அமைந்து குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளன.
தமிழ்நாட்டின் மகப்பேறு மரண விகிதம் 1 லட்சம் பிரசவங்களுக்கு 35 ஆகக் குறைந்து, இந்தியாவில் கேரளா மற்றும் ஆந்திராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள போதிலும், இந்த புதிய மருத்துவ சவால்களை எதிர்கொள்ள சாதாரண கர்ப்பகாலப் பரிசோதனைகளுடன் தொற்றா நோய்களுக்கான (NCD) பரிசோதனைகளையும் இணைக்க வேண்டும் எனப் பொது சுகாதார வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
