களு கங்கையின் துணை ஆறான குடா கங்கையின் மேல்நிலப் பகுதிகளில் பெய்துள்ள பலத்த மழை மற்றும் குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமை காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் வெள்ளப்பெருக்கு சமவெளிகளைச் சேர்ந்த தாழ்நிலப் பகுதிகள் இந்த வெள்ள நிலைமையினால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் கிளை வீதிகள் நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
