இ-பாஸ்போர்ட் (மின்னணு கடவுச்சீட்டு) திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ, மே 29, 2026 அன்று மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட ஏலதாரர்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மேற்குறிப்பிடப்பட்ட திட்டத்தின் கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக நாங்கள் இதன் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறோம்,” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DIE/PRO/PKI/2025 என அடையாளம் காணப்பட்ட இந்த டெண்டர், “இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கான இ-பாஸ்போர்ட்டுகளைத் தனிப்பயனாக்குவதற்கான வழங்கல் முறைமை மற்றும் அது தொடர்பான பொது விசை உள்கட்டமைப்பு கூறுகள் (Public Key Infrastructure Components)” என்ற தலைப்பில் அமைந்திருந்தத.
இந்தத் திட்டத்திற்கான ஏலங்கள் கடந்த ஆண்டு கோரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
