இலங்கையைச் சுற்றியுள்ள பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் முன்னெச்சரிக்கை மையத்தினால் ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, நாளை முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவரிக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் (50-60 kmph) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் பகுதி கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலையின் உயரமானது சுமார் 2 முதல் 3 மீற்றர் (2 – 3 meters) வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் அலைகள் கரையை நோக்கி எழும்பும் (surges) அபாயமும் காணப்படுகிறது.
குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
