அமெரிக்காவின் பிரபலமான H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறும் வாய்ப்பை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் புதிய சட்டமூலம் ஒன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தின் 21ஆவது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிப் ராய், கடந்த வியாழக்கிழமை (04) “American Workers Employment Act” எனப்படும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்த பின்னர் அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை செய்ய அனுமதிக்கும் OPT (Optional Practical Training) திட்டத்தையும் முழுமையாக நீக்குவதற்கான பரிந்துரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த விசா சீர்திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிட்ட சிப் ராய், கடந்த நான்கு தசாப்தங்களாக H-1B விசா முறை பெரிய நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், திறமையான அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பணியாளர்களை புறக்கணித்து குறைந்த செலவிலான வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு இது வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய குலுக்கல் (Lottery) முறையை நிறுத்தி, அதிக ஊதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் தகுதி அடிப்படையிலான புதிய முறைமை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சட்டமூலத்திற்கு அமெரிக்காவின் பல முக்கிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், நடைமுறையில் உள்ள H-1B விதிமுறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல கடுமையான பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்;
சொந்த நாட்டில் நிரந்தர முகவரி கட்டாயம்:
H-1B விசா பெறுவோர் தங்கள் சொந்த நாட்டில் நிரந்தர முகவரி இருப்பதையும், அதை கைவிடும் நோக்கம் இல்லையெனவும் நிரூபிக்க வேண்டும்.
தங்கும் கால வரம்பு குறைப்பு:
தற்போது 6 ஆண்டுகள் வரை வழங்கப்படும் H-1B விசா காலத்தை 2 ஆண்டுகளாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
விசா நீட்டிப்பு சலுகை நீக்கம்:
கிரீன் கார்டு அனுமதிக்காக காத்திருக்கும் காலத்தில் H-1B விசாவை நீட்டித்துக்கொள்ளும் நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளது.
குலுக்கல் முறைக்கு பதிலாக ஊதிய அடிப்படையிலான தேர்வு:
தற்போதைய லாட்டரி முறையை நீக்கி, அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கி வரும் சூழ்நிலையில், இந்த சட்டமூலம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
