அதிகரித்து வரும் நட்டநிலை, எரிபொருள் செலவின் உயர்வு மற்றும் கட்டணத் திருத்தம் தொடர்பாக அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்கத் தவறியுள்ளதாகக் கூறி, நாளை (08) முதல் தனியார் பேருந்து சேவைகளை சுமார் 50 சதவீதம் வரை குறைக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சனிக்கிழமை (07) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
பேருந்துக் கட்டண திருத்தம் மற்றும் எரிபொருள் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சாதகமான பதில் அளிக்காத காரணத்தினால், ஜூன் 8 முதல் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிதிச் சிரமங்களால் ஏற்கனவே சுமார் 25 சதவீத தனியார் பேருந்துகள் தன்னார்வ அடிப்படையில் சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, நாளாந்த பயணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், அத்தியாவசிய உச்ச நேர சேவைகள் மட்டுமே முன்னுரிமையாக இயக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
பாடசாலை மற்றும் அலுவலக நேர நெரிசல் காலங்களில் மட்டுமே அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதுடன், பல திட்டமிடப்பட்ட சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் நான்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்துகள் மூன்று பயணங்களாகக் குறைக்கப்படலாம் என்றும், இதன் மூலம் மொத்த சேவைகள் சுமார் 50 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மத்தியிலும் தற்காலிக நிவாரணங்களை வழங்கத் தவறியுள்ளதாக விஜேரத்ன குற்றம்சாட்டினார்.
ஜூலை மாத தொடக்கத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தற்போதைய செலவின உயர்வுகளை கருத்தில் கொண்டால் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இம்மாத இறுதியில் டீசல் விலையில் உயர்வு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் சங்கம் வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியான நட்டநிலை காரணமாக வழக்கமான சேவைகளை பராமரிப்பது சாத்தியமற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். நட்டத்தில் பேருந்துகளை தொடர்ந்து இயக்குவது சாத்தியமில்லை,” என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
