மட்டக்களப்பில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பவம் நேற்று (07) பகல் 12.00 மணியளவில் பார் வீதி, மட்டிக்கழி மீன் சந்தை அருகே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வேளையில் எதிரே வந்த போக்குவரத்து பொலிசார் வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்ய முற்பட்டபோது, வாகனத்தை செலுத்திய நபர் தனது கையடக்கத் தொலைபேசியை பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் இருந்த மற்றைய நபரிடம் விசாரணை நடத்திய பொலிசார், வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், குறித்த நபருக்கு அபராதம் மற்றும் தப்பிச் சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் மொத்தமாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர், 60 ஆயிரம் ரூபாய் வழங்கினால் மோட்டார் சைக்கிளை விடுவிக்க முடியும் என பொலிசார் தெரிவித்ததாகவும், பின்னர் அது 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணம் இல்லாத காரணத்தால் தனது மனைவியின் நகையை அடமானம் வைத்து 30 ஆயிரம் ரூபாயை பெற்று, அதை வழங்கிய பின்னரே மோட்டார் சைக்கிளை மீட்டுக்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் தங்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
எனவே, மாவட்டத்தில் சில போக்குவரத்து பொலிசார் கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இத்தகைய செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உரிய கவனம் செலுத்தி உண்மைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
