ஹொரணைப் பகுதியில் இயங்கி வந்த திண்பண்ட உற்பத்தி நிலையம் ஒன்றை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியபோது, சுகாதார விதிமுறைகளை மீறி உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் (07) சிறுவர்களுக்கான நொறுக்குத் தின்பண்டங்களை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின் போது, அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட நிறமூட்டிகள், உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சுவையூட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உணவுகளில் கலக்கப்பட்டிருந்ததுடன், தொழிற்சாலை முழுமையாக சுகாதாரத் தரநிலைகளை பின்பற்றாமல் இயங்கியிருந்ததும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத மற்றும் சுகாதாரமற்ற உணவு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் பல இடங்களில் இயங்கி வரக்கூடும் என்பதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விரும்பும் தின்பண்டங்களை இயன்றவரை வீட்டிலேயே தயாரித்து வழங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
