அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகள் கடல்சார் குற்றச்செயல்களை தடுக்கும் தங்களது உறுதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிராந்திய கடற்பரப்புகளை பல்வேறு உருவெடுத்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையான ‘ஒப்பரேஷன் டிசி ரெலா 3’ கடந்த ஜூன் 8 ஆம் திகதி கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை 2026 ஜூன் 8 முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பு, திருகோணமலை, வாலைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மிரிஸ்ஸா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை கடற்பரப்பில் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளின் சட்ட அமுலாக்க மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் இதில் இணைந்து செயல்படுகின்றன.
“கடல்சார் சூழலை விழிப்புடன் கண்காணித்தல்” என்ற பொருள்படும் ‘டிசி ரெலா’ என்ற பெயர், சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை தடுக்கும் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் பகிர்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. முந்தைய கட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை, கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் இரு நாடுகளின் வலுவான கூட்டாண்மையையும் வெளிப்படுத்துகிறது.
இலங்கையின் கரையோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்த ஆதரவாக, அவுஸ்திரேலிய அரசு இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஐந்து அதிவேக அனைத்து நிலப் பயண வாகனங்களையும் (ATVs), பன்னிரண்டு நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன்களையும் கையளித்துள்ளது. இவ்வசதிகள் கரையோரப் பகுதிகளை திறம்பட கண்காணிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஒப்பரேஷன் டிசி ரெலா 3’ ஊடாக இரு நாடுகளும் கூட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல், சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கிடையிலான புலனாய்வு தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் கரையோர சமூகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்தல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட நாடுகடந்த கடல்சார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதோடு, பிராந்திய கடல்சார் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படுவதே இதன் நோக்கமாகும்.
தொடக்க நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், இலங்கைக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜோன்ஸ்டன் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கை கடலோரக் காவல்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிப் பணிப்பாளர் நாயகம் கொமடோர் பிரசாத் ஜயசிங்க, துறைத் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் பல மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதியை மீளவும் வெளிப்படுத்தினர்.
