நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி இன்று (10) உத்தியோகபூர்வமாக மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி திலகா சேனாவின் முழுமையான நிதிப் பங்களிப்பில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) நடைமுறைப்படுத்தலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டிடத் தொகுதியை, அந்த அமைப்பின் திட்டப் பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரன் கையளித்தார்.
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு, பாடசாலை அதிபர் திரு. பி. முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
இதில் ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பெருந்தோட்டக் கல்விக்கான இணைப்பதிகாரி திரு. எம். பி. சந்திரசேகரன், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொழில்நுட்பம், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத் தொகுதி, மாணவர்களுக்கு மேம்பட்ட கல்விச் சூழலையும் தரமான கற்றல் வசதிகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு வகுப்பறைக் கட்டிடத் தொகுதியின் நிர்மாணத்திற்காக சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
