இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார்.
வருடாந்த பாடசாலை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 1- 10 வரையிலான மாணவர்களின் விபரங்களை உள்ளடக்கியே இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிளிலேயே இந்த எண்ணிக்கை மிக உயர்வாகக் காணப்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், பாடசாலைகளில் இருந்து விலகியதாகப் பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கைக்குள், கல்வியை முற்றாகக் கைவிட்டவர்கள் மட்டுமன்றி வேறு சில காரணங்களால் விலகிய மாணவர்களும் உள்ளடங்கியிருக்கலாம் எனப் பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற மாணவர்கள், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அல்லது வேறு ஏதேனும் கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பைத் தொடருபவர்களும் உள்ளடங்க வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
