செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட புடவைகள் விநியோகம் செய்யப்படாமல் கிராம அலுவலர் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்புட்ட நேரியகுளம் கிராம மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய ஒரு தொகை புடவைகள் மீட்கபபட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணமாக வழஙகப்பட வேண்டிய புடவைகள், வேட்டிகள் என்பன நீண்டகாலமாக பெட்டிகளிலும், மூட்டைகளிலும் பொதி செய்யப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக உடனடியாக அப்பகுதி கிராம அலுவலரைத் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வருகை தந்து விளக்கம் அளிக்குமாறு கோரிய போதிலும், அவர் அந்த இடத்திற்கு வருகை தரத் தவறிவிட்டார் என செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிலவிய ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளின் போது, செட்டிகுளம் பிரதேசத்தின் சில கிராம அலுவலர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சூழலில், கிராம அலுவலர்களுக்குமான உள்ளக இடமாற்றங்கள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில் இந்த ஆடைகள் பல மாதங்களாக தேக்கி வைக்கப்பட்டிருந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச செயலாளரிடம் வினவிய போது, இந்த விவகாரம் அல்லது பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதேச செயலகத்தின் அனுமதியோ அல்லது கவனமோ இன்றி இவ்வளவு பொருட்கள் தேக்கப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்திலும்இ நிவாரண உதவிகளாகவும் வந்த பொருட்களை மக்களிடம் சேர்க்காமல் வீணடித்தமை மற்றும் முறைகேடாகப் பூட்டி வைத்தமை குறித்து உயர்மட்ட விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வதோடு, சேதமடையாமல் எஞ்சியுள்ள பொருட்களைத் தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு உடனடியாகப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
