பிரேசிலில் இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், புகழ்பெற்ற அமெரிக்க ஆல்ட்- பொப் (American alt-pop) பாடகரும் இணைய ஆளுமையுமான ஆலிவர் ட்ரீ (Oliver Tree.)உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (14) காலை ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகொப்டர்களும், அங்கிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.
“பயணிகள் பட்டியலில் 32 வயதான ஆலிவர் ட்ரீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், விபத்தில் உடல்கள் மிக மோசமாகக் கருகியுள்ளதால், மரபணு பரிசோதனைக்கு பின்னரே உடல்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஹெலிகொப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் அங்கிருந்த சுமார் 20 மின்சார கார்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகொப்டரில் ஒரு பிரேசிலிய இசைத் தயாரிப்பாளர், அர்ஜென்டினாவின் வீடியோ இயக்குனர், மற்றும் ‘காஸ்பி’ என்று அழைக்கப்படும் பிரபல அர்ஜென்டினா யூடியூபர் காஸ்பர் பிரிம் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். மற்றொரு ஹெலிகொப்டரில் பைலட் மட்டும் இருந்துள்ளார். இரண்டு ஹெலிகொப்டர்களிலும் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
