கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் நிஷாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தின் 67 பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 3,122 மாணவர்கள் மற்றும் 782 ஆசிரியர்களின் தற்போதைய நிலைமை, எதிர்கால கல்வி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடைவிலகல், கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், பெருந்தோட்ட பாடசாலைகளை மாதிரி பாடசாலைகளாக மாற்றுதல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துதல், விளையாட்டு மைதானங்கள் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நிதி ஒதுக்கீட்டுத் தாமதம், நிர்வாகச் சவால்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
