புயலின் தாக்கத்தால் சேதமடைந்த மலையக ரயில் மார்க்கத்தின் மீதமுள்ள பகுதிகளில் பழுதுபார்க்கும் பணிகள் தற்போது அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நானுஓயா முதல் பதுளை வரையான ரயில் பயணிகள் சேவை எதிர்வரும் சனிக்கிழமை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதை தொடர்பான நிலைமைகளை ஆராயும் வகையில், ஹட்டனில் இலங்கை போக்குவரத்து சபை குறைபாடுகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது மலையக ரயில் சேவைகள் பதுளை மற்றும் அம்பேவெல பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்கிவரும் சூழலில், சேதமடைந்த பகுதிகளை விரைவாக சீரமைத்து வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாவலப்பிட்டியிலிருந்து பதுளை வரையான ரயில் சேவையை முழுமையாக வழமைபோல் இயக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
