முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரபலமான கல்வி நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில், நிர்வாகக் கட்டுப்பாட்டின் குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்கள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாய நிலை தற்போது அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் மற்றும் கல்வி வட்டாரங்கள் கவலை வெளியிடுகின்றன.
பாடசாலை பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும் நிலையில், வழக்கமாக பெண் மாணவர்கள் பிரதான வாயிலையும், ஆண் மாணவர்கள் பின்புற வாயிலையும் பயன்படுத்தி வெளியேறுகின்றனர். எனினும், 17.06.2026 புதன்கிழமை அன்று ஆண் மாணவர்கள் பயன்படுத்தும் பின்வாயில் பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இடத்தில் மாணவர்களை ஒழுங்குபடுத்தி வெளியேற்றுவதற்காக ஆசிரியர்களோ அல்லது மாணவ தலைவர்களோ யாரும் இல்லாததால், மாணவர்கள் அங்கு நீண்ட நேரம் குவிந்திருந்த நிலை ஏற்பட்டது.
வெளியேற முடியாமல் காத்திருந்த மாணவர்கள் கட்டுப்பாடற்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதாகவும், சிலர் மதில் ஏறி வெளியேறியதாகவும், மேலும் சிலர் அதே வழியில் முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு குறைபாடு வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பின்வாயில் வழியாக வெளியேறும் இடம் பாதுகாப்பற்றதாக காணப்படுவதுடன், நெரிசல் காரணமாக மாணவர்கள் சிரமத்துடன் வெளியேற வேண்டிய நிலையும் தொடர்கிறது. கடந்த காலங்களில் அதே பகுதியில் மாணவர்கள் தவறி விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதில் ஏறி வெளியேறும் போது விபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்பது யார் என்ற கேள்வியும் எழுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவ்வாறான நிலைமைகளைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தப்படுகிறது.
