நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி மற்றும் நானு ஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியியலாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில் இந்த ரயில் சேவையானது சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

டித்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக ரயில் மார்க்கம் ரயில்வே திணைக்களத்தின் கடின உழைப்பினால் மீண்டும் புத்துயிர் பெற்று பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 ரயில் பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
