மக்கள் வங்கி அடகு வைத்த சொத்துக்களை ‘பராடே சட்டம்’ கீழ் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய எடுத்த தீர்மானத்தை எதிர்த்து ‘தயா குரூப் லிமிடெட்’ மற்றும் ‘தயா அப்பாரல் எக்ஸ்போர்ட்’ நிறுவனங்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வங்கிக்கு சட்ட உரிமை உண்டு எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. மேலும், மனுதாரர் நிறுவனங்கள் ரூ. 10 இலட்சம் வழக்குச் செலவாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் 1.42 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைக் கடனை வசூலிக்க அடகு சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய மக்கள் வங்கி எடுத்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19, எரிபொருள் நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.
எனினும், 2021 மார்ச் 26 அன்று பராடே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தபோதும் கடன் செலுத்தப்படாததை நீதிமன்றம் சுட்டிக்காட்டி, வங்கியின் நடவடிக்கையை செல்லத்தக்கதாக உறுதிப்படுத்தியது.
மேலும், மனுவை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நியாயமான காரணம் வழங்கப்படாததால் ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
