சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த ஈரானின் தலைமை பேச்சுவார்த்தை பிரதிநிதியும் பாராளுமன்ற சபாநாயகருமான மொஹம்மத் பாகர் காளிபாப், X சமூக ஊடகத்தில் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்.
“அவர்களின் மிரட்டல்கள் உண்மையில் பலம் வாய்ந்தவையாக இருந்திருந்தால், இன்று இவ்வளவு அவசரத்துடனும் விரக்தியுடனும் அவர்கள் செயல்பட்டிருக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை ஈரான் பெரிதாகக் கருதவில்லை என்றும், தேவை ஏற்பட்டால் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாக தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க அதிகாரிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எங்கள் ஆயுதப் படைகள் தகுந்த முறையில் பதிலளிக்கத் தயாராக உள்ளன” எனவும் காளிபாப் வலியுறுத்தியுள்ளார்.
