குழந்தைகள் துஷ்பிரயோகங்களை குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பல்துறை செயல்முறை அமைப்பு கூட்டம், மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அமைச்சரவை முன்வைக்கப்பட்ட காலாண்டு அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றின் முன்னேற்றம் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பொலிஸ் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களில் நிலவும் பணியாளர் வெற்றிடங்கள் காரணமாக, குழந்தைகள் தொடர்பான வழக்குகள் மற்றும் புகார்களில் தாமதம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைகள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் உள்ள பொலிஸ் பிரிவை மீளமைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதை இரண்டாம் நிலை அடிப்படையில் அந்த அமைப்புடன் இணைப்பது என யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில், பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவற்றை வழங்கும் பணிகள் முன்னேறி வருவதாகவும், வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இத்திட்டம் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
