தமிழகத்தில் 19 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடையும் எண்ணிக்கை சமீப காலமாக உயர்வடைந்து வருவதாக தமிழக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை நடத்திய, புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழக சுகாதாரத்துறை கடந்து சில வருடங்களாக மாநில முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களின் தரவுகளைக் கொண்டு விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதில் குறிப்பாக 15 முதல் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் கணிசமாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 16 மில்லியன் சிறுமிகள் பதின்ம வயதில் கர்பமடைவதாகவும், தமிழகத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகயிருப்பதும் இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு சிறு வயதிலேயே கர்ப்பமடைவதால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்குமே, கடுமையான மருத்துவ சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக சிறுவயதில் பெண்களின் இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் பிரசவத்தின் போது அதிக சிக்கல்கள் ஏற்படுகின்றன.
போதிய அளவு உடல் முதிர்ச்சி இல்லாததால் பிரசவகால மரணங்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவயதில் கர்ப்பம் அடைவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சட்டவிரோதமாக நடத்தப்படும் குழந்தை திருமணங்கள், கிராமப்புறம் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமை, சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு மற்றும் போதிய வழிகாட்டல்கள் இல்லாமை போன்ற பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன
இந்த சிக்கலான நிலையை தீர்க்கவும் சிறுவயதில் கர்ப்பம் அடைவதை தடுக்கவும், தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்படுதல்,
கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குதல் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
