2026 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு அரசு மற்றும் தனியார் பாடசாலைகளின் தரம் 12 மாணவர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் 2026 ஜூன் 22 முதல் ஜூலை 16 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவிக்கையில், அனைத்து விண்ணப்பங்களும் பாடசாலை அதிபர்கள் அல்லது கல்வி நிலையத் தலைவர்களின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதிபர்கள் http://www.doenets.lk அல்லது http://www.onlinexams.gov.lk/eic என்ற உத்தியோகபூர்வ இணையதளங்களில் உள்நுழைந்து, வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து, ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். மேலும், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டு முதன்முறையாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள, 2026 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தனியார் பாடசாலை மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டு, கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் மாணவர்களின் தகவல்களை மீண்டும் பதிவு செய்ய முடியாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 அவசர உதவி இலக்கம் அல்லது 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0112784422 என்ற தொலைநகல் இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.
