கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” என அழைக்கப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வேளையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
