அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது சொந்தப் புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய பாஸ்போர்ட்டின் மாதிரிப் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் புகைப்படம், நாட்டின் அதிகாரப்பூர்வ பயண ஆவணம் ஒன்றில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையின் பின்னணியில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது மேஜையில் சாய்வாக நிற்பது போன்ற ஒரு கம்பீரமான புகைப்படம் இந்த பாஸ்போர்ட்டில் இடம் பெற்றுள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு கீழே அவரது அதிகாரப்பூர்வ கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த பக்கத்தில், ஜான் டம்பல் என்பவரால் வரையப்பட்ட புகழ்பெற்ற “சுதந்திரப் பிரகடனம்” (Declaration of Independence) ஓவியமும், அதனுடன் ஒருங்கிணைந்த ‘அமெரிக்கா 250’ (America 250) என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இந்த சிறப்புப் பதிப்பு பயண ஆவணத்திற்கு “தேசபக்தர் பாஸ்போர்ட்” (Patriot Passport) என்று பெயரிட்டுள்ளது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை முன்னிட்டே இந்த விசேட பதிப்பு பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
