சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில், அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு, பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இம்ரான் கானை வைத்தியசாலைக்கு மாற்றி, அடுத்த விசாரணை நடைபெறும் வரை அங்கேயே வைத்திருக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும், இம்ரான் கானின் முழுமையான வைத்திய அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
73 வயதான முன்னாள் பிரதமரின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடியாலா சிறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிகிச்சைக்குப் பின்னர் இம்ரான் கானின் கண் நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், அவரது பார்வை “கிட்டத்தட்ட இயல்பான நிலையில்” இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி, அவரை வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததுடன், அவரது சொந்த வைத்தியர்களை அணுகுவதற்கும் அனுமதி கோரியிருந்தது.
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு சட்ட வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
