குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. பல வருட கால யுத்தத்திற்குப் பிறகு தேசிய ஒற்றுமையுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், யுத்தத்திற்குப் பிந்தைய காலங்களில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்ட வகையில் இனவாதமும் மதவாதமும் தூண்டப்பட்டதால் நாடு மீண்டும் பிளவுபடுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தை உருவாக்க புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
