பொசன் பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (30) ஆம் திகதியும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை, தேசிய தரைவழி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து இந்த விசேட சேவைகளை முன்னெடுத்து வருகின்றன.
பொசன் வழிபாட்டு யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு வசதியாக திரும்பிச் செல்லும் வகையில் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல இலங்கை போக்குவரத்து சபை மேலதிக விசேட பேருந்துகளை இயக்கியுள்ளதுடன், பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக அநுராதபுரத்திலிருந்து பல விசேட ரயில்களும் இயக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
