பள்ளி மாணவர்களுக்கும் தனியார் வகுப்பு (டியூஷன்) மாணவர்களுக்கும் சிகரெட் விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 கடை உரிமையாளர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி நகர எல்லையில் இயங்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக பிராந்திய புலனாய்வு அதிகாரிகள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் தலா 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய மேலும் இரண்டு கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
