உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக நடத்திய மிக கடுமையான ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் கீவ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நகரின் முதல்வர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக, உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, எச்சரித்த சில மணித்தியாலங்களிலேயே இந்தத் கொடூரத் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 11 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பல கட்டங்களாக இந்தத் தாக்குதல் நீடித்தது.
உக்ரைன் வான் படையின் கூற்றுப்படி, ரஷ்யா ஒரே இரவில் 74 ஏவுகணைகளையும் 496 ஆளில்லா வானூர்திகளையும் ஏவியுள்ளது.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை பெரும்பாலானவற்றை முறியடித்த போதிலும், 25 பேலிஸ்டிக் ஏவுகணைகளும் 12 ஆளில்லா வானூர்திகளும் கீவ்வின் 33 இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
