பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (07.07.2026) நடைபெற்ற நிகழ்வில் இந்த அட்டையை கையளித்தார்.
2026 ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அறிவித்த OCI நடைமுறை எளிமைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் OCI அட்டைக்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது.
அந்த புதிய தகுதி நடைமுறையின் கீழ் இலங்கையில் வழங்கப்பட்ட முதல் OCI அட்டை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது, இந்திய அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள e-OCI சேவையையும் இந்திய உயர்ஸ்தானிகர் அறிமுகப்படுத்தினார்.
இந்த e-OCI சேவையின் மூலம் அட்டைதாரர்கள் தங்களது திறன்பேசியில் டிஜிட்டல் OCI அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் இலங்கைக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.
