நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 63 835 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 21,543 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதோடு, இம்மாதம் கடந்த 7 நாட்களில் மாத்திரம் 8451 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது. டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 142 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 42 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு சதவீதமும் 0.07 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது. இதேவேளை மேல் மாகாணத்தில் 52.59 சதவீத டெங்கு நோயாளர்களும், தென்மாகாணத்தில் 15.77 சதவீத நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆகையால் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயல்பட வேண்டும். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பும் அதன் தூய்மையும் எமது கரங்களிலேயே உள்ளது. அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமையும் எம்மை சார்ந்தே உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.
வீட்டு சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலேயே நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன. ஆகையால் வாராந்தம் இருமுறை வீடு உட்பட சுற்றுப்புற சூழலை 15 நிமிடங்கள் தூய்மை படுத்துவதன் மூலம் டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
