ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரர் லமீன் யமால், காற்பந்து விளையாட்டு மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், முன்னாள் ஸ்பெயின் பிரதமர் மாரியானோ ரஜோய் வெளியிட்ட சர்ச்சைக்குரிய இனவாதக் கருத்து தொடர்பில் யமாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“பிரான்ஸ் அணியில் பிரெஞ்சு வீரர்களே இல்லை” என மாரியானோ ரஜோய் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த யமால், காற்பந்தின் நோக்கம் மக்களை ஒன்றிணைப்பதே எனக் குறிப்பிட்டார்.
“பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் வெவ்வேறு பின்னணிகளை கொண்ட மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்த உதாரணங்கள். காற்பந்து என்பது அனைவரையும் அரவணைப்பது பற்றியது” என அவர் தெரிவித்தார்.
மொராக்கோ தந்தைக்கும் எக்குவடோரியல் கினியா தாய்க்கும் பிறந்த லமீன் யமால், தனது 19ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
இதனிடையே, பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே முழுமையான உடற்தகுதியுடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் திடியே தெஷாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
காயம் காரணமாக காலிறுதியில் பாதியில் வெளியேறிய எம்பாப்பே தற்போது முழுமையாக குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இலக்குடன் பிரான்ஸ் அணி இன்று ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
