கண்டியில் பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் ஒரு மாதமாக பேராதனை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற நான்கு தரப்பினர் முன்வந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை எந்த தரப்பினருக்கும் உடலை ஒப்படைக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் இருமாடி வீட்டின் மேல் தளத்தில் கடந்த 16 வருடங்களாக வசித்து வந்த தம்பதியினர், அவரை அன்புடன் பராமரித்து வந்ததுடன், 14 வருடங்களாக வாடகையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் எனக் கூறி மேலும் மூவர் உடலை கோரியுள்ளனர்.
இதனால் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. உரிமை தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் ஊடாக தீர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
