ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்து, மீண்டும் மோதல் நிலை உருவாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானால் அங்கீகரிக்கப்படாத கடல் வழித்தடத்தில் பயணித்ததாகக் கூறி சில வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த பதற்றம் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கிரேட்டர் துன்பீ தீவின் பாதுகாப்பு நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி பயணிக்க முயன்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால் வளைகுடா பிராந்தியத்திலிருந்து இடம்பெறும் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளை பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
