தலவாக்கலை நகரில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய மூன்று உணவகங்களை மூடி சீல் வைக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.
கடந்த ஜூலை 4ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில், சுகாதார தரநிலைகளை பின்பற்றாத மூன்று உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அவற்றுக்கு எதிராக ஜூலை 15ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த உணவகங்களை உடனடியாக மூடி சீல் வைக்க உத்தரவிட்டதுடன், முறையே ரூ.33,000, ரூ.36,000 மற்றும் ரூ.39,000 அபராதம் விதித்துள்ளது.
மேலும், ஒரு மாதத்திற்குள் அனைத்து சுகாதார குறைபாடுகளையும் சரிசெய்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் நடத்தப்படும் ஆய்வில் திருப்திகரமான அறிக்கை கிடைத்தால் மட்டுமே உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தலவாக்கலை நகரில் உணவகங்களின் சுகாதார நிலை குறித்து நீண்டகாலமாக எழுந்திருந்த பொதுமக்களின் கவலைக்கு மத்தியில், இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.
