தலவாக்கலை அஞ்சல் அலுவலகத்தில் சேவைகளைப் பெறுவதற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவசரப் பதிவு (Registered Post) மூலம் முக்கிய கடிதங்களை அனுப்புவதற்காக வருகை தரும் சிலர், அதிக நேரம் காத்திருந்தும் சேவை கிடைக்காமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சில அதிகாரிகளின் அலட்சியமான அணுகுமுறை மற்றும் சேவையில் ஏற்படும் தாமதம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரச சேவை நிறுவனங்கள் மக்களுக்கு விரைவாகவும், மரியாதையுடனும் சேவைகளை வழங்க வேண்டிய நிலையில், இவ்வாறான தாமதங்கள் மக்களின் நம்பிக்கையை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக மேலதிக பணியாளர்களை நியமித்தல், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குதல், அவசர அஞ்சல் சேவைகளுக்கான தனி கவுன்டர் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலவாக்கலை அஞ்சல் அலுவலக சேவை தொடர்பில் அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான சேவையை உறுதி செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
