தலைமை நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் அவசரக் கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற மற்றும் அதற்கு வெளியேயுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கக்கூடும் என்பதால், அதற்கு எதிராக அரசியல் மற்றும் சிவில் மட்டங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதே கூட்டத்தின் நோக்கமாகும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கான அழைப்பை விடுக்கும் நோக்கில், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் அவர் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாகவும், அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நீதியரசர்களின் ஓய்வுவயது நீட்டிப்பு தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை நீதிச்சேவை சங்கம் உள்ளிட்ட உள்நாட்டு அமைப்புகளும், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
