தற்கொலை செய்து உயிரிழந்த இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் பூதவுடலுக்கான இறுதிக்கிரியைகள், அரச மரியாதைகளுடன் இன்று (20) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
மாலபே, தலாஹேன பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 17 ஆம் திகதி காலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு, முல்லேரியா கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். அவர் தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடற்கூற்றுப் பரிசோதனையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், உடல் பாகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி என்பன நீதிமன்றினூடாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய அவரது மனைவி மற்றும் 3 மெய்பாதுகாவலர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது மகன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற விவகாரம் ஒன்றின் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்துக்கு முன்னர் அவரைச் சந்திக்க வந்த நபர்கள் குறித்தும், இல்லத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பொரளை தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது பூவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயரிழந்த பொலிஸ் மா அதிபரின் இறுதிக்கிரியைகள் இன்று (20) பொரளை பொது மயானத்தில் இடம்பெற உள்ளதோடு , அதற்கான தயார்படுத்தல்களும் நிறைவடைந்துள்ளன.
அன்னாரது இறுதிக்கிரிகைள் மேலும் முழுமையான பொலிஸ் உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் இன்று (20) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
