இந்தியாவின் இளைஞர் தலைமையிலான “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (CJP) இயக்க ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி புதுடெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றுள்ளனர்.
போராட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்த போதிலும், திங்கட்கிழமை (20) நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் புதுடெல்லியில் ஒன்று கூடியுள்ளனர்.
தேசிய மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டத்தின் போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரான சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வி முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் அல்லது போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை அணுகி தமது கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் இடம்பெற்ற மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக 20 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
