இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இராணுவத்தில் இருந்த மிகச் சிறந்த மற்றும் திறமையான அதிகாரி. உலகளவில் புலனாய்வுத் துறையினர் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சுரேஷ் சலே இராணுவத்தில் இணைந்த காலத்தில் அவரை நேர்முகத் தேர்வு செய்த அதிகாரியாகவே நான் செயற்பட்டேன். சுரேஷ் சலே இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் நம்பிக்கைக்குரியவராகவும், எதிர்காலத்தை தொலைநோக்கோடு பார்த்து மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு அதிகாரியாகவும் இருந்தார். போருக்குத் தேவையான விசேட தகவல்களைப் பெற்றுக்கொடுத்ததுடன், அதற்கான திட்டமிடல்களையும் மேற்கொண்ட அதிகாரியும் ஆவார்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், நானும் அந்த வழக்கில் ஒரு சாட்சியாக உள்ளதாலும் இது குறித்து மேலதிக கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது.
தேசிய பாதுகாப்பில் புலனாய்வுப் பிரிவானது மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. உலகில் ஏனைய நாடுகளில் இத்தகைய காட்டிக்கொடுப்புகள் இடம்பெறுவதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது குறித்து வருத்தமடைகின்றேன்.
இன்று நாட்டில் போதைப்பொருள் பரவல் மற்றும் குழுக்களுக்கிடையிலான வன்முறைகள் அதிகரித்து, பொலிஸார் மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலைந்து வருகின்றது. கடந்த காலங்களில் சிறியளவில் ஆரம்பமான சம்பவங்களே பாரிய போராக உருவெடுத்தன. தற்போதும் மறைமுகமாக இந்த அபாயம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. எனவே சுயலாபங்களைப் பொருட்படுத்தாது திட்டமிட்ட ரீதியில் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் ஒரு பெரிய கொந்தளிப்பான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
முப்பதாண்டு காலப் போரை நிறைவுசெய்த இராணுவ வீரர்களுக்கு உரிய கௌரவத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். தற்போதைய அரசின் சில தலைவர்கள் இராணுவ வீரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவததைத் தவிர்த்து வருகின்றனர். நாட்டின் எதிர்காலத்துக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைய வேண்டும் என்றார்.
