நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் தொகுதிகள் இன்று (25) வனாத்தவில்லுவ தகன நிலையத்தில் அழிக்கப்படுகின்றன.
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோ 478 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், மாரவில நீதிமன்ற வளாகத்திலிருந்து இன்று காலை பாதுகாப்புடன் வனாத்தவில்லுவ லக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள தகன உலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மாரவில மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் கிஹான் பஸ்நாயக்கவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட குறித்த போதைப்பொருட்கள் அதிக வெப்பநிலையில் எரித்து அழிக்கப்படவுள்ளன.
மேலும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிறைவடைந்த போதைப்பொருள் தொகுதிகளும் இதே தகன நிலையத்தில் அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
