மாத்தறை தேவேந்திரமுனையைச் சேர்ந்த மீனவத் தந்தை மற்றும் மகன் இருவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் திகதி ‘சோமிரச’ மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோர், படகு இயந்திரக் கோளாறால் கடல் நீரோட்டத்தில் பங்களாதேஷ் கடற்பரப்புக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.
படகில் தொடர்பு மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் இல்லாததால் தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில், வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பங்களாதேஷ் மீனவர்கள் இருவரையும் மீட்டனர்.
தற்போது சிட்டகொங் பொலிஸ் பாதுகாப்பில் உள்ள இருவரையும், இலங்கை தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
