பாதாள உலகக் குழு உறுப்பினர் நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவை பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றுவதற்காக இடம்பெற்றதாகக் கூறப்படும் 12 கோடி ரூபா இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி ஹொரண அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவன பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கடந்த ஜூன் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடம் பணம் கோரப்பட்டதாகவும், ஆரம்பத்தில் 50 கோடி ரூபா கோரப்பட்ட நிலையில் பின்னர் 20 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டதாகவும், அதில் 12 கோடி ரூபா முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்தேகநபர்களின் பிணை மனுக்கள் ஜூலை 28ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.
